சென்னை: தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும் ஏற்கெனவே இருக்கக்கூடிய தடுப்பூசி மையத்தை பூட்டி வைப்பார்கள்! குஜராத்திலோ உடனே தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு, தயாரிப்பு பணிகளும் ஆரம்பித்து விட்டன! ஆனால் பாருங்கள் தமிழக பாஜகவிற்கோ இதற்கெல்லாம் குரல் வராது என திமுக செய்தி தொடர்பாக குற்றம் சாட்டடியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத், அன்கலேஷ்வரில் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க அனுமதி கோரி முதல்வர் ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தியும், அதை கண்டுகொள்ளாமல், மாற்றாந்தாய் மனப்பான்மையில் மோடி அரசு செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முயற்சியில் தடுப்பூசி தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டுமன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செங்கல்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தயாரிப்பு மையம் அனைவருக்கும் நோய்த்தடுப்பு என்ற (universal Immunization programme) திட்டத்தின் கீழ் 904 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
ஆனால், இந்த மையத்தில் இதுவரை எந்தவொரு நோய்க்கும் மருந்துகள் தயாரிக்கப்படாம் இருந்து வருகிறது. இந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, வலியுறுத்தி வருவதுடன், ஸ்டாலின் நேரில் சென்றும் ஆய்வு நடத்தினர். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடேக் நிறுவன அதிகாரிகளும் தமிழகஅரசின் அழைப்பின் பேரில் வந்து தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷவர்தனும் நேரில் வந்து ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, இந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு தனியார் நிறுவனமும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், ‘எச்.எல்.எல். பயோடெக்கின்’ தாய் நிறுவனமான ‘எச்.எல்.எல் லைப் கேரை’ பங்கு விற்பனை மூலம் மோடி அரசு தனியாருக்கு தாரை வார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்தில், மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளின் தேவை அதிகரித்து வருவதால், தடுப்பூசி தயாரிக்கும் வகையில், செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகஅரசு ஏற்று நடத்த முன்வந்தும், மத்தியஅரசு அனுமதி மறுத்து வருகிறது.
ஆனால், பிரதமர் மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் வணிக ரீதியிலான கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியுள்ளார். குஜராத் மாநிலம் அன்கலேஷ்வரில் உள்ள தடுப்பூசி மையத்தில் தற்போது நமது நாட்டு தயாரிப்பான கோவாக்சின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கோவாக்சின் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக இரசாயன மற்றும் உர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2020 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதிய தாக்கல் செய்யும் வசதி இப்போது கோவாக்ஸின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவதாகவும், முன்னதாக அங்கு சுகாதாரத்துறை வல்லுநர் குழுவினர், தடுப்பூசி தயாரிக்க இருப்பது குறித்து ஆய்வுகளை நடத்தியதாகவும், அதைத்தொடர்ந்தே இங்கு ஜூன் மாத தொடக்கத்தில் உற்பத்தி தொடங்க அனமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் வணிக ரீதியிலான தடுப்பூசி செப்டம்பர் 2021 முதல் விநியோகத்திற்கு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
அதுபோல, ஜராத், அன்கலேஷ்வரில் தயாரிக்கப்பட்ட வணிக ரீதியிலான கோவாக்சின் தடுப்பூசி வெளியிடும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 29) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா குஜராத், அன்கலேஷ்வரில் தயாரிக்கப்பட்ட முதல் வணிகக் கோவிட் -19 தடுப்பூசியை வெளியிட்டார். அப்போது, தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வலுப்படுத்த தடுப்பூசி மிக முக்கியமான விஷயம் என்றும், அன்கலேஷ்வர் ஆலை ஒரு மாதத்திற்கு ஒரு கோடி டோஸுக்கு மேல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனம் ஹைதராபாத், மாலூர், பெங்களூரு மற்றும் புனே வளாகங்களில் தடுப்பூசியை தயாரித்து வரும் நிலையில், அதனுடன், சிரோன் பெஹ்ரிங், அன்கலேஷ்வர் தடுப்பூசி தயாரிப்பு மையங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கோவாக்ஸின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துஉள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டங்களில் ஒன்றாக இந்தியா இயங்கி வருவதாகவும், இந்த உள்நாட்டு தடுப்பூசிகளின் வளர்ச்சியால் இது சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார்.
மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை இதிலும் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடுப்பூசி தயாரிக்க போதுமான வசதிகள் இருந்தும், அங்கு தயாரிக்க அனுமதி வழங்காத மத்தியஅரசு, குஜராஜ் மாநிலத்திற்கு அனுமதி வழங்கி, தடுப்பூசி தயாரித்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
தமிழகஅரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக குரல்கொடுத்து வரும் தமிழ்நாடு பாஜக, இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்து வருகிறது. காவிரி விவகாரத்தில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளை மீறி மேகதாது அணையை கர்நாடக மாநில அரசு கட்டமுடியாது என்பதால், மேகதாது அணைக்கு எதிராக குரல்கொடுப்பது போல பாவ்லா காட்டி வரும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தடுப்பூசி தயாரிப்பு விஷயத்தில் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மோடி அரசின், தமிழகத்தின் மீதுன மாற்றந்தாய் மனப்பான்மை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியின் புகைப்படத்துடன் டிவிட் பதிவிட்டுள்ள திமுக செய்தி தொடர்பாக சரவணன் அண்ணாதுரை, இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும் ஏற்கெனவே இருக்கக்கூடிய தடுப்பூசி மையத்தை பூட்டி வைப்பார்கள்!
குஜராத்திலோ உடனே தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு, தயாரிப்பு பணிகளும் ஆரம்பித்து விட்டன! ஆனால் பாருங்கள் தமிழக பாஜகவிற்கோ இதற்கெல்லாம் குரல் வராது! என்று தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.