புதுடெல்லி:
உத்திரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், லண்டனிலிருந்து திரும்பிய மருத்துவர் ஒருவரிடம் இரண்டு பேர் தாந்திரீகர்கள் என்று கூறி, அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகவும் அது அவருடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றும் தெரிவித்து 2.5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
பிரஹம்மபுரி காவல் நிலையத்தின் கீழ் வரும் கைர்நகர் பகுதியில் தான் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மருத்துவர் லாய்க் காஹ்ன் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அந்த விளக்கை வாங்கியுள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு சமீனா என்ற ஒருவர் மருத்துவர் லாய்க் காஹ்னிடம் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார், பின்னர் அவரது உடல்நிலையை சோதிக்க மருத்துவர் தொடர்ந்து வந்து சென்றுள்ளார், அப்போதுதான் சமீனா மூலமாக அந்த இரு நபர்களை மருத்துவர் சந்தித்துள்ளார், அந்த இருவரும் தங்களிடம் அபார சக்தி உள்ளதாக தெரிவித்து மருத்துவருக்கு, அலாவுதீனின் அற்புத விளக்கை தருவதாகவும் தெரிவித்துள்ளனர், மேலும் அந்த அற்புத விளக்கால் அவர் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மருத்துவரின் கூற்றுபடி அந்த விளக்கிலிருந்து ஜின் வருவதைப் போல வேடமிட்டு ஒருவரை அவர் முன் நிறுத்தியுள்ளனர், மருத்துவர் அவரை தொட சென்ற போது அவ்வாறு தொடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். முழு பணத்தையும் கொடுத்த பின்னர் அந்த விளக்கை எடுத்துச் செல்லலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மருத்துவரிடமிருந்து தவணை முறையில் 2.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். சிறிது காலத்திற்குப் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் ஜின்னாக வருவது சமீனாவின் கணவர் என்பதையும் உணர்ந்தார்.
அவர் ஏமாற்றப்படுவதை உணர்த்த உடனே மருத்துவர் லாய்க் காஹ்ன் காவல் நிலையத்தை அணுகியுள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் தற்போது சமீனா என்ற அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.