டெல்லி: வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்  வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள  இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளது. இன்று 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று இரவு சென்னை உள்பட  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களி  கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. மழையின் போது மின்சார வயர் அறுந்து விழுந்து வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் நேற்று நடந்தது.

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செப்.23ம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் செப்.26ம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில்,  வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. செப் 23ம் தேதி வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

செப் 26ம் தேதி வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் செப் 19,21 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.