திருவனந்தபுரம்: கேரளாவில் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளான பி.என்.ரவீந்திரன், வி.சிதம்பரேஷ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி போராடி வருகிறது. இழந்த ஆட்சியை பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் இறங்கி உள்ளது. பாஜகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தலைமையில், விஜய யாத்திரை என்ற பெயரில் பிரச்சாரம் நடந்து வருகிறது. கொச்சியில் உள்ள திருப்புனித்துராவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சுரேந்திரன் ஈடுபட்டு இருந்தார். அப்போது, முன்னாள் நீதிபதிகள் ரவீந்திரன், சிதம்பரேஷ் இருவரும் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர்.
ரவீந்திரன் 2007ம் ஆண்டு முதல் 2018 வரை கேரள உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். சிதம்பரேஷ் 2011 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
முன்னாள் நீதிபதிகளுடன், முன்னாள் டிஜிபி வேணுகோபால் நாயர், அட்மிரல் பிஆர் மேனன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் முன்னாள் பொது மேலாளர் சோமாச்சுதனும் கட்சியில் இணைந்தனர்.