பெங்களுரூ:
ர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் பேரன் சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள், கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த தொகைகையை சசிதரின் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெற்றதாகவும், இந்த தொகை 2020 ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையிலான கால கட்டத்தில் கைமாறியது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த பணபரிமாற்றம் நடந்துள்ளதற்கான ஆவணங்களை ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. சசிதர் மார்டியின் இரண்டு நிறுவனங்கள் பணம் பெற்றதை உறுதி செய்யும் வகையில் அந்த நிறுவனங்களின் வங்கி கணக்கை தனியார் தொலைக்காட்சி 8 நாட்களுக்கு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இதே காட்சிகளை மீண்டும் தற்போது வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம், தனியார் தொலைக்காட்சியான பவர் டிவி, ஆர்சிசிஎல் என்ற பெயர் கொண்ட தனியார் நிறுவனம், பெங்களுரூ அடுக்கு மாடி கட்டிட திட்டத்தில் 666 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியது.

இந்த திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆர்சிசிஎல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் கட்சிகள் இணைந்து கர்நாடகவில் ஆட்சியில் இருந்தன.

இந்த குறித்து செய்தியாளரக்ளிடம் பேசிய மார்டி, இந்த பணம் கடனாக பெற்றதாகவும், அவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். தனியார் தொலைகாட்சி தன் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், இந்த குற்றச்சாட்டு தவறான நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்து வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க, ஆர்சிசிஎல் இயக்குனர் சந்திரகாந்த் ராமலிங்கத்தை தொடர்பு கொண்ட போது, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

இந்தபோதிலும், தான் பெங்களுரூ மேம்பாட்டு ஆணையத்திடம் தான் பேசியதாக பவர் டிவி வெளியிட்டுள்ள ஆடியோ தவறானது என்றும்  இவர் பவர் டிவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் அண்மையில் அளித்த பேட்டியில்,

முதல்-மந்திரி எடியூரப்பா இதற்கு முன்பு காசோலை மூலம் லஞ்சம் வாங்கினார். இந்த முறை ஆர்.டி.ஜி.எஸ். மூலமாக லஞ்சம் பெற்றுள்ளார். வங்கி நடவடிக்கைகள் மூலமாகவே அவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், அவருக்கு ஊழலில் எவ்வளவு ஆர்வம் உள்ளது என்பதை கவனிக்க முடியும். பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனர் தனக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக அவரை பணி இடமாற்றம் செய்ததாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஆடியோ பதிவு ஒன்றில் கூறியுள்ளார். அவர் மீது பா.ஜனதா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் எல்லாம், நான் லஞ்சம் வாங்க மாட்டேன், மற்றவர்கள் லஞ்சம் வாங்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுகிறார். ஆனால் லஞ்ச குற்றச்சாட்டில் முதல் இடத்தில் உள்ள விஜயேந்திராவுக்கு மோடி பா.ஜனதா துணைத்தலைவர் பதவியை வழங்கியுள்ளார். ஊழல் செய்தவர்களை எடியூரப்பா பாதுகாக்கிறார். இந்த விஷயத்தில் மோடி மவுனம் காக்கிறார். விஜயேந்திரா மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறும் வரை எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எடியூரப்பாவை மோடி நீக்க வேண்டும்.

முதல்-மந்திரி எடியூரப்பா, அவரது மகன், பேரன் மற்றும் மருமகன் மீதான லஞ்ச புகார்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் ரூ.666 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம் கட்டும் திட்டத்தில் எடியூரப்பா குடும்பத்தினர் லஞ்சம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லஞ்ச பணம் கொல்கத்தாவை சேர்ந்த 7 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் முதல்-மந்திரி அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது.

லஞ்ச புகாருக்கு ஆளாகியுள்ள பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்?. லஞ்ச புகார் எழுந்துள்ளதால் அந்த ஒப்பந்தத்தை முதல்-மந்திரி எடியூரப்பா ரத்து செய்யாதது ஏன்?. இந்த லஞ்ச புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடத்த வேண்டும். இந்த விசாரணை முடிவடையும் வரை எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.