அமராவதி:
சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் இருந்து பாஜகவை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளனர்.
அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் ராஜினாமா செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
மத்திய நிதி நிலை அறிக்கையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காததாலும், சிறப்பு நிதி ஒதுக்காத தாலும், தெலுங்கும் தேசம், பாஜக கட்சிகள் இடையே அதிருப்தி நிலவி வந்தது. இதன் காரணமாக, தற்போது தொடங்கி உள்ள பாராளுமன்ற வளாகத்தில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர். அதுபோல, பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்போது, நாங்கள் மக்களுக்கு பணி ஆற்ற மத்திய அமைச்சரவையில் சேர்ந்தோம்.ஆனால் இப்போது எங்கள் சொந்த மாநில மக்களுக்கு தேவையானவைகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.எங்களுக்கு உதவ மத்திய அரசு மறுத்து வருகிறது.எனவே இனியும் எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், அமைச்சரவையில் தொடர வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம், நாளை (இன்று) ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மாநிலஅமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் 2 பேர் இன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, தாங்கள் அமைச்சரவையில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள விரிசல் மேலும் பெரிதாகி உள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி உள்ள நிலையில், தற்போது தெலுங்கு தேச கட்சியும் விலகக்கூடிய சூழலில் உள்ளது.
மத்திய அமைச்சரவவையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக விமானப் போக்குவரத்து அமைச்சராக அசோக் கஜபதி ராஜு மற்றும் அறிவியல் தொழில் தொடர்புத்துறை இணை அமைச்சராக ஒய் எஸ் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.