டில்லி
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டில்லியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தண்ணீர் சேகரிக்கும் தரைத் தொட்டியில் கழிவுநீர் கலந்துள்ளது. மழை பெய்ததால், அந்தத் தொட்டியில் உள்ள நீர் கலங்கிப் போய் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அது மட்டுமின்றி கழிவுகளும் வெளியே வர ஆரம்பித்தது. இதைக் கண்ட கட்டிடத்தின் மேற்பார்வையாளர் நிரஞ்சன் சிங் மற்றும் தோட்டக்காரர் ரித்திப்பால் ஆகியோர், தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஐந்து பேரை பணியில் அமர்த்தியுள்ளனர்.
அவர்கள் சரண்சிங், தீபக், அனில், பல்விந்தர் மற்றும் ஜஸ்பால் ஆவார்கள். அவர்கள் அந்தத் தொட்டியை சுத்தம் செய்ய ஒருவர் பின் ஒருவராக இறங்கியுள்ளனர். தொட்டியின் உள்ளே விஷ வாயு உருவாகி இருந்தது. அந்த விஷ வாயு தாக்கி இறங்கியவர்களில் நால்வர் மரணமடைந்தனர். . ஐந்தாவதாக இறங்கிய ஜஸ்பால் பாதி இறங்கியதுமே விஷவாயுவின் நெடி தாங்காமல் மேலே வந்து மயங்கி விழுந்து விட்டார். அவர் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.
இது தொடர்பாக நிரஞ்சன் சிங் மற்றும் ரித்திப்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஐவரும் அபாயகரமான இடம் எனக்கூறி வேலை செய்ய மறுத்ததாகவும் ஆனால் நிரஞ்சன் மற்றும் ரித்திப்பால் வற்புறுத்தலின் பேரிலேயே தொட்டியினுள் இறங்கியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
முதலில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் அளிக்கப்படாமல் அபாயகரமான இடத்தில் பணி புரிய ஆட்களை அமர்த்தியதாக வழக்கு பதியப்பட்டிருந்தது. பின்பு அது விஷவாயு உள்ள இடம் என்றும் தெரிந்தே ஆட்களை வேலைக்கு அமர்த்தியதால் கொலை வழக்கு என்று பதியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்