டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டுவிட்டர்வாசிகள் பல்வேறு கோணங்களில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
பெரும் பரபரப்பு, பதற்றம் என பல கலவையான கவலைகளுடன் இன்று வெளியாகி இருக்கிறது அயோத்தி தீர்ப்பு. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றது.
எந்த சமரசமும் வெற்றி பெறவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றத்தால் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒருமித்தமாக வழங்கி இருக்கின்றனர்.
தீர்ப்பு குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களும் தத்தமது கருத்துகளை வெளியிட்டு உள்ளனர். சாதாரண விஷயத்துக்கு டுவிட்டர் வழியே விழுந்து, விழுந்து கருத்துகளை சொல்லும் டுவிட்டராட்டிகள் இதனையும் விட்டு வைப்பார்களா என்ன?
அவரவர் பார்வையில் கருத்துகளை முன் வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். தனஞ்ஜெய் மகாபத்ரா என்பவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் ஆகியோர் கடுமையான வேலைப்பளு, பணிகளுக்கு இடையே தாஜ் ஓட்டலுக்கு இன்றிரவு விருந்துக்கு செல்ல இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.
வித்யா சுப்ரமணியம் என்பவர், 1949ம் ஆண்டு சிலைகளை நிறுவிய பிறகு, 1982ம் ஆண்டு பாபர் மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது. சூறையாடியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் இப்போது வெகுமதி அளிக்கிறது. என்ன ஒரு முன்மாதிரி? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சுனித் அரோரா என்பவர் கடந்த காலங்களில் முக்கிய வழக்கு ஒன்றில் வெளியான தீர்ப்பை ஒன்றை கோடிட்டு, தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:
ஒரு சாலை விபத்தில் ஏழையை கொன்றதற்காக செல்வந்தர் ஒருவர் சிறைக்கு செல்லும் போது இந்தியாவில் உண்மையாக சட்டம் செயல்படுகிறது என்று பொருள் என்றார். நான் அவரிடம், இல்லை.. இந்தியா சம வாய்ப்பு அளிக்கும் நாடு. சட்டத்தை மீறிய கும்பலுக்கு வெகுமதி அளித்திருக்கிறது என்று கருத்துகளை உதிர்த்து இருக்கிறார்.
சஞ்சுகா பாசு என்பவர் சற்றே வித்தியாசமாக கூறியிருக்கிறார். பிங்பாங் மூலம் பிரபஞ்சம் உருவானது. அதன் பிறகு 1947ம் ஆண்டு மனித நாகரிகம் இருந்தது. 1947ம் ஆண்டு இந்தியா ஜனநாயக நாடாக மாறியது. 1992ம் ஆண்டு ஒரு கும்பலால் வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டது. அது குடிமக்களின் உரிமைகளை பறித்தது. 2019ம் ஆண்டு இடிப்பை தவறு என்று கூறியது, ஆனால் முழு நிலத்தையும் இடித்த அந்த கும்பலுக்கு வழங்கி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி, காந்தி படுகொலை வழக்கு இதனுடன் ஒப்பிட்டு தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது: இன்று காந்தி கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தால் எப்படி இருக்கும்? நாதுராம் கோட்சே தான் கொலைகாரன், ஆனால் அவர் ஒரு தேச பக்தர் என்று கூறியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஜாவத் அன்சாரி என்பவர் ஒரு வரியில் தீர்ப்பு மதிப்பதாகும், இந்த விவகாரம் இத்தோடு முடிந்தது என்றும் கூறியிருக்கிறார். கார்த்திகேய சர்மா என்பவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியையும் உள்ளே இழுத்து வைத்து கருத்து கூறி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நீதித்துறையில் நம்பிக்கை பற்றி கூறுவது இது முதல் முறை அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சேது சமுத்திர வழக்கில் பிராமண பத்திரம் வாபஸ் பெறப்பட்டது. ராமர் இருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார்.