டில்லி,
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமா இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல கட்ட விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், நேற்றைய விசாரணையை தொடர்ந்து தேர்தல் கமிஷன் முடிவு அறிவிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது 30ந்தேதிக்கு விசாரணையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் காரணமாக இரட்டை இலை தொடர்பான விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
அதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் இறுதிக்குள் முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மதுசூதனன், பன்னீர் செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, புதிதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பி னால் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம் என கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 5ந்தேதி மற்றும் 16ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் விசாரணையை 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
நேற்றைய விசாரணையின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சசிகலா தரப்பும் கலந்து கொண்டனர். டிடிவி தரப்பில் இருந்து மேலும் புதிதாக 2 புகார்கள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணை மேலும் தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக அடுத்த கட்ட விசாரணையை 30ந்தேதி தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.
சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என பொதுக்கூட்டத்தில் பேசியதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு டிடிவி தரப்பில் கொண்டு செல்லப்பட்டது. மேலும், சென்றனர். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அபிடவிட்களில் 10 அபிடவிட்கள் போலியானவை என்றும் புகார் கூறியது.
மேலும், தேர்தல் ஆணைய வழக்கில் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் தன்னையும் இணைக்க வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்தார். சசிகலாவும், தினகரனும் கட்சி உறுப்பினர்களே அல்ல என அவரது தரப்பில் கூறப்பட்டது.
இவர்தான் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இரட்டை தொடர்பான வழக்கு தொடர்ந்து, இரட்டை இலை வழக்கை அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிக்க வேண்டும் என மதுரை உ யர் நீதிமன்றக் கிளையில் உத்தரவு பெற்றது குறிப்பிடத்தக்கது.