சென்னை: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தலைவா் விஜய் மனு தாக்கல் செய்துள்ளாா். ஏற்கனவே வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் வழக்குகளை தொடர்ந்துள்ள நிலையில், தற்போது தவெக தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனுக்கள் மீது வரும் 16ந்தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏப்ரல் 5-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இநத் நிலையில், இந்த திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவித், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி, டெல்லிச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானாத்துல்லா கான் ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற அமைப்பின் சார்பிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தைப் பறிக்கும் அபாயகரமான சதி இச்சட்டம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மே,’நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையை தருவது மட்டுமின்றி, அவர்களுக்கு முழுமையான மத சுதந்திரத்தை அளித்துள்ள நமது அரசியலமைப்புச் சட்டம் மீதான நேரடி தாக்கல் இது.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
. சிவில் உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம், சமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புகளின் சார்பிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த திருத்தச் சட்டம், அரசியலமைப்புக்கும், அரசியலமைப்பின் 14,15,21, 25,26 மற்றும் 300- ஏ சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது என உத்தரவிடக் கோரியும் உச்ச நீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தவெக தலைவா் விஜய்யும் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இதற்கிடையில், வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஏதேனும் உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், தனது தரப்பு கருத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியஅரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், வஃபு சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை வரும் 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.