சென்னை: எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது?  என எதிர்கேள்வி எழுப்பிய  தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பல ஆண்டு காலமாக பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி, நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அறிவித்து உள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், திமுக கூட்டணியில், ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரி வருகின்றனர். ஆனால், அதை ஏற்க  திமுக தயாராக இல்லை. அதை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். இதனால் இரு கட்சிகளுக்கு இடையே சலசலப்பு தொடர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. திமுக தலைமை கட்சி வாரியாக தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளை அழைத்து பேசி வருகிறது.

இதற்கிடையில், கடந்த 23ந்தேதி  சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக எம்பி கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’   ஊடகத்துக்கு  பிரத்யேக பேட்டி அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேசத்தான் வேண்டும்; எந்த கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது? என்று கூறியதுடன், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி அரசு என்பதால், திமுக உடன்ன காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு தகவல்கள் பரிமாற்றப்பட்டு வரும் நிலையில், நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு  கிரிஷ் சோடங்கர் பதில் அளித்துள்ளார்.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு.  பதில் கூறிய ஷோடங்கர், இதுவரை (பிப்ரவரி 25) எங்களை அழைக்கவில்லை. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு காத்திருக்கிறோம் என்றார்.

இதையடுத்து நெறியாளர்,  திமுகவிடம் காங்கிரஸ் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறியவர், அதுகுறித்த  பேச்சுவார்த்தை தொடங்கியதும் உங்களுக்குத் தெரிவிப்போம். அப்போதுதான் நாங்கள் என்ன கேட்கிறோம், அவர்கள் என்ன கொடுக்க முன்வருகிறார்கள் என்பதை சரியாக தெரிவிக்க முடியும் என்றார்.

இரு கட்சிகளுக்கும் இடையே  அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே, சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே உயர்நிலைத் தலைவர்கள் வருகைகள் நடந்தன, உண்மையில் என்ன நடக்கிறது?  என கேள்வி நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்  என்ற ஷோடங்கர்,  அப்போது,  காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளார் கே.சி. வேணுகோபாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து விவாதித்தனர் என்றவர்,  தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றார்.  மேலும்,  உள்ளாட்சி தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு குறித்து இருவரும் விவாதித்தனர். எங்களின் முக்கிய நிபந்தனை கூடுதல் தொகுதிகள் பற்றியது. இரு கட்சிகளின் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்தும்போது அதுகுறித்து விவாதிப்போம் என்றார்.

உள்ளாட்சி அளவில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள திமுக ஒப்புக்கொண்டதா?  கேள்விக்க,  ஆம். உள்ளாட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் திமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

மாநில அளவில் அதிகாரத்தில் பங்கு பெற காங்கிரஸ் முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு,   எந்தக் கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? நாங்கள் ஒரு அரசு சாரா நிறுவனத்தை நடத்தவில்லை, ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உள்ளன. ஆனால், அத்தகைய கலாசாரம் தமிழ்நாட்டில் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நெறியாளர். நீங்கள் அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை கைவிட்டுவிட்டீர்களா? அல்லது தொடருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறியவர்,  அரசியலில் எதையும் கைவிட முடியாது. இந்த விருப்பம் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளன. அவற்றை நமது கோரிக்கைகளாக முன்வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என்று கூறியுள்ள  விஜய்யின்  தவெக கட்சியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? என்று வினவினார். இதற்கு பதில் கூறியவர்,  ஒவ்வொரு அரசியல் கட்சியும் லட்சியத்தின் காரணமாக உருவாகிறது. அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல்கள் முடிவு செய்யும். 40 வயதுக்குட்பட்டவர்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் விஜய்யின் கட்சி செல்வாக்குப் பெற்று வருவதாக நான் கேள்விப்படு கிறேன். அதுதான் (தவெகவின் தாக்கம்) எங்கள் கவலை என்றார்.

தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக  தகவல்கள் பரவி வருகின்றன. தவெகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சிக்கிறதா?  என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஷோடங்கர்,  தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர் என சூசகமாக கூறினார்.

தொடர்ந்து, நெறியாளர்,  தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதா? என அடுத்த கேள்விக்கனையை வீசினார். அதற்கு பதில் அளித்த மேலிட பொறுப்பாளர்,  தற்போது நாங்கள் திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இதனால் மீண்டும் நெறியாளர்,  விஜய்யுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதை நீங்கள் மறுக்கவில்லையே என்றார்.

அதற்கு,  அரசியலில் எல்லோரிடமும் பேச வேண்டும். அரசியல் கட்சிகளிடையே தொடர்பு ஒருபோதும் இல்லாமல் இருக்காது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள். அதிமுக தலைவர்களை சந்திக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வோம் என்றார்.

இதைத்தொடர்ந்து நெறியாளர்,  காங்கிரஸுக்குள் இருந்து வரும் விமர்சனங்களும், முரண்பட்ட குரல்களும் திமுகவுக்கு அழுத்தம்  கொடுப்பதற்கான உத்தியா? அது கட்சியின் பிம்பத்தை பாதிக்கிறதா?  என்ற கேள்விக்கு,  எங்கள் கட்சி ஜனநாயக ரீதியில் அனைவரின் கருத்துகளையும் மதிக்கிறது. கடந்த தேர்தலில் நாங்கள் திமுக கூட்டணியில் போட்டியிட்டோம்.

எங்கள் மாநிலத் தலைவர் (கே. செல்வப்பெருந்தகை) திமுக தலைமையுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறார். அதற்காக யாரும் தலைவரை விமர்சிக்கக்கூடாது. நாங்கள் ஏன் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? திமுக எங்களால் அழுத்தம் அடைந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? நாங்கள் வைக்கும் கோரிக்கைக்கு அவர்கள் ஆம் அல்லது இல்லை என்று சொல்லப் போகிறார்கள். இது வாழ்வா? சாவா? பிரச்னை கிடையாது என்றார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எப்போது தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு,  தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கான நாள் வரும். 58 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் இல்லாத போதிலும் உயிரோட்டம் உள்ள வலுவான தொண்டர் எங்களிடம் உள்ளனர். 234 தொகுதிகளிலும் சுமார் 5,000 விண்ணப்பங்களைப் பெற்றோம். அது எங்கள் பலத்தைக் காட்டுகிறது.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]