தொலைக்காட்சி சேனல்களில் தினமும் 30 நிமிடம் ‘தேசிய நலன்’ சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு வழிகாட்டுதல்கள் 11 ஆண்டுகள் கழித்து தற்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் 2011 ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய டெலிபோர்ட்டர்களின் மூலம் அதன் செயற்கைகோள் வழித்தடத்தில் ஒளிபரப்பப்படும் வெளிநாட்டு சேனல்களுக்கு நிகழ்ச்சிகளுக்கான உள்ளடக்கத்தை இந்த ‘இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான வழிகாட்டுதல்கள், 2022’ வரையறுத்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 897 சேனல்களில் தற்போது 30 சேனல்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேனல்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் என்ன:
நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி பெற வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. நிகழ்வு குறித்து முன்கூட்டியே பதிவு மட்டும் செய்தால் போதுமானது.
சேனல்கள் தாங்கள் ஒளிபரப்பும் மொழியை மாற்றுவதற்கு அல்லது ஸ்டாண்டர்ட் டெபினிஷனில் (SD) இருந்து ஹை டெபினிஷனில் (HD) மாற்றுவதற்கு அல்லது HD யில் இருந்து SDயாக மாற்றுவதற்கு ஒப்புதல் தேவையில்லை. மாற்றம் குறித்த முன்னறிவிப்பு செய்தால் மட்டும் போதுமானது.
இரண்டுக்கும் குறைவான இயக்குனர்கள் அல்லது பங்குதாரர்களைக் கொண்ட ஒளிபரப்பு நிறுவனம் அல்லது LLP செய்திகளை சேகரிக்க DSNG அல்லாத ஆப்டிக் ஃபைபர், பேக் பேக், மொபைல் போன்ற கருவிகளை அவசரகாலத்தில் தனி அனுமதியின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், இந்த மாற்றம் பாதுகாப்பு அனுமதிக்கு உட்பட்டது.
செய்தி நிறுவனங்களுக்கு தற்போது ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவரும் அனுமதி இனி ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
சி-பேண்ட் அல்லாத வேறு அதிர்வெண் பேண்டில் இணைக்கும் டிவி சேனல்களுக்கு அவற்றின் சிக்னல்களை என்க்ரிப்ட் செய்வதை கட்டாயமாக்குகிறது.
பெண்களின் உரிமைகளை ஊக்குவித்தல், கல்வியறிவை ஊக்குவித்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவித்தல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலனை ஊக்குவித்தல் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் 30 நிமிட பொதுநல நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்.
என்று புதிய வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளது.
சமூக ஊடகங்களை சார்ந்திருந்த ஆளும் கட்சி தற்போது 30 நிமிடம் தாங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று இந்த புதிய வழிகாட்டுதல்கள் மூலம் கட்டாயப்படுத்தி இருப்பது சேனல்கள் மீதான அடக்குமுறை என்றும் பாஜக தனது வேதத்தை ஓத உருவாக்கியுள்ள சந்தர்ப்பம் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.