தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய  எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற சூழல் கெடுவதோடு, மக்களுக்கும் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவதோடு, இந்த ஆலையை மூடக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நூறு நாள் போராட்டத்தை அறிவித்த மக்கள், நூறாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பத்து பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.