சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி தொடுத்தனர்.

அப்போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களே கேட்காத நிலையில், இறந்தவர்களின் குடும்பம் மீது திடீர் அக்கறை ஏன்? என்று கூறி தமிழக அரசுக்கு குட்டு வைத்தது.

தூத்துக்குடியில் தமிழக போலீசார்  நடத்திய கொடூரமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ள னர். பலர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று உயிரிழந்தவர்களின்  உடல்கள் அவசரம் அவசரமாகபிரேத பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ மனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் சங்கரசுப்பு  தாக்கல் செய்த வழக்கில், விசாரணை முடிந்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடாது, அவர்களின் உடல்களை பதப்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பதப்படுத்த முடியாது என்று தமிழக அரசு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே முறையீடு செய்தது.  அத்துடன், கூடுதலாக  கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்தது.

அதில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உடல்களை கொடுக்க வேண்டும் என்று பொய் சொல்லி இருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  உயிரிழந்தவர்கள் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது ஏன். உயிரிழந்தவர்களின் மீது தமிழக அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று குட்டு வைத்தது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அனைவரின் உடலையும் பதப்படுத்திய ஆக வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை  உடலை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தனர்.