பான்முன்ஜம்:

வடகொரிய எல்லைப் பகுதிக்குள் நடந்து சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கை குலுக்கிப் பேசினார்.


1950-53-ம் ஆண்டுகளில் நடந்த கொரிய போருக்குப் பின், இதுவரை எந்த அமெரிக்க அதிர்பர்களும் கொரியாவுக்கு செல்லவில்லை.

69 ஆண்டுகளுக்குப் பின் அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கு சிறிது தொலைவு நடந்து சென்று கிம்முடன் கைகுலுக்கி வரலாறு படைத்தார்.

வடகொரிய மற்றும் தென்கொரிய எல்லையில் ஆயுதம் விலக்கப்பட்ட பகுதியில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேசினர்.

ஐநாவின் எச்சரிக்கையையும் மீறி வடகொரி அதிபர் கிம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, ஹைட்ரஜன் குண்டுகள், அணுகுண்டுகள் ஆகியவற்றை சோதனை செய்து கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தார்.

இதனால் அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வார்த்தைகளால் மோதிக் கொண்டனர்.

இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முயற்சியால் வடகொரியா அதிபர் கிம்மும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்து அமைதிப் பேச்சில் ஈடுபட சம்மதித்தனர்.

இதன்படி, கடந்த ஆண்டு ஜுன் மாதம் சிங்கப்பூரில் இருவரும் முதல் முறையாக சந்தித்து அமைதிப் பேச்சில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்குப் பின், இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த பதற்றமான சூழல் தணிந்தது.

வடகொரியாவும் அணு ஆயுதங்களை சோதனை செய்வதை கைவிட்டது. இதனையடுத்து, நிரந்தரமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வியட்நாமில் கடந்த பிப்ரவரி மாதம் பேச்சு நடத்த இரு தலைவர்களும் செய்திருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை திடீரென ரத்தானது.

இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பானின் ஒசாகா நகருக்கு அதிபர் ட்ரம்ப் சென்றபோது, மாநாட்டில் இருந்தவாறே வடகொரிய அதிபர் கிம்முக்கு ட்விட்டரில் செய்தி அனுப்பினார்.

அதில் ஜி20 மாநாட்டை முடித்து எனது நாட்டுக்கு திரும்பும் முன் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்தித்து கைகுலுக்கி ஒரு ஹலோ சொல்வேன் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு வடகொரியாவும் சம்மதித்தது. இதன்படி, தனி விமானம் மூலம் வட கொரியாவுக்கு சென்ற அதிபர் ட்ரம்ப், வடகொரிய எல்லையில் ஆயுதம் விலக்கப்பட்ட பான்முன்ஜன் பகுதியில் உள்ள ட்ரூ கிராமத்தில், சிறிது தொலைவு நடந்து சென்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் பேசினார்.