டில்லி,

ரட்டை இலை சின்னபெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில்  டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார்.

அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இரட்டை இலை விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை டில்லி போலீசார் விசாரணைக்கு வர சம்மன் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து டில்லி சென்று போலீசார் முன் ஆஜரானார். கடந்த 4 நாட்களாக அவரிடம் டில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.  சுமார் 35 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து நேற்று இரவு தினகரன் கைது செய்யப்பட்டதாக டில்லி போலீஸ் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரன் இன்று பிற்பகல்3.20 மணி அளவில் தீஸ் ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது டிடிவி தினகரன் சார்பாக அவரது வக்கீல் விகாஸ் பவான் ஜாமின் மனு தாக்கல் செய்து வாதாடினார்.

அப்போது, விசாரணையின்போது, டில்லி போலீசார் தினகரனை டிடிவி தினகரனை துன்புறுத்திய தாக குற்றம்சாட்டினார். மேலும், போலீசார் சம்மன் அனுப்பிய உடனே ஆஜரானதால், ஜாமின் வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்.

ஆனால், டிடிவி தினகரனிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும், அதற்காக 7 நாட்கள் போலீஸ் காவல் தேவை என்று போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரணைக்காக சென்னை. பெங்களூர், கொச்சி அழைத்து செல்ல வேண்டியதிருப்பதால் அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது விசாரணை நடைபெற்று வந்தது. தினகரன் ஜாமினுக்கு டில்லி காவல்துறை போலீசார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அதையடுத்து டிடிவி தினகரனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றைய விசாரணையின்போது,  டிடிவி தினகரனின் நண்பர்  மல்லிகார்ஜுனாவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.