திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது தேவஸ்தானம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக யாரும் இல்லாத டீ கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கும் டிடிஎஃப் வாசனின் இந்த செயல் “என்ன கோவிந்தா இதெல்லாம் ?” என்று கேட்க வைத்துள்ளது.
பொதுமக்கள் செல்லும் சாலைகளில் ரேஸ் பைக்குகளில் அதிவேகமாக சென்று வீடியோ எடுத்து பிரபலமானவர் யூ டியூபர் டிடிஎஃப் வாசன்.
இவர் மீது தமிழ்நாட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வீடியோ எடுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திருப்பதிக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்ய சென்ற டிடிஎஃப் வாசன் அங்கு வந்த பக்தர்களுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்.
அப்படி காத்திருந்த டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் நீண்ட நேரம் ஆகியும் காத்திருப்பு அறையின் கதவு திறக்கப்படாத நிலையில் அதை திறப்பது போல் செல்ல அந்த அறையில் காத்திருந்த மற்ற பக்தர்கள் தேவஸ்தான ஊழியர் தான் கதவை திறக்க வந்ததாக நினைத்து சாமி தரிசனத்துக்கு ஆர்வமுடன் தயாரானார்கள்.
ஆனால், கதவை திறக்காமல் அதை திறப்பது போல் அவர்கள் நடித்ததைப் பார்த்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பக்தர்கள் அங்கலாய்த்தனர்.
இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த டிடிஎஃப் வாசன் தனது யூ டியூபில் வெளியிட்டார். அவரது இந்த பிராங்க் வீடியோ வைரலானதை அடுத்து திருப்பதியில் விதிகளை மீறி காத்திருப்போர் அறையில் கேமராவுடன் நுழைந்தது எப்படி என்பது குறித்தும் விதிகளை மீறி வீடியோ எடுத்தது குறித்தும் தேவஸ்தான அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.