புதுச்சேரி:

நாட்டின் ஒரே மொழியாக இந்திமொழி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இந்தியை மட்டும் திணிக்க முயற்சிப்பது நாட்டை ஒன்றாக வைத்திருக்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாளாக சில இந்தி பேசும் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து டிவிட் போட்டுள்ள உள்துறை  அமித்ஷா, இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்றும், , நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

அமித்ஷாவின் கருத்துக்கு திமுக, அதிமுக, பாமக, மதிமுக, விசிக  உள்பட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

‘எங்கள் தேசத்திற்கு ஒரே மொழி இருக்க வேண்டும்’ என்ற எச்.எம்.அமித் ஷாவின் கருத்து, இந்தியை மட்டும் திணிக்க முயற்சி செய்கிறது. இது  நாட்டை ஒன்றாக வைத்திருக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை செய்ததுடன்,  இந்திய ஆட்சியின் முக்கிய மந்திரமான அனைத்து மதங்களையும், கலாச்சாரங்களையும், மொழிகளையும் நாம் மதிக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்து உள்ளார்.