உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மூன்றாண்டுகளுக்கு முன் துருக்கி மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் பேச்சுவாரத்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந்த மத்தியஸ்த முயற்சியில் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியம் என்றும் புடின் அப்போது வலியுறுத்தினார்.
எனினும் உக்ரைன் மீதான தாக்குதலை கைவிடாத ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலையீடு குறித்து ரஷ்ய அதிபர் பேசியிருப்பது குறித்து நேற்று உக்ரைன் சென்ற இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சமாதான பேச்சில் ஈடுபடுத்துவது போரை முடிவுக்கு கொண்டு வர பெரிதும் உதவும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் இந்தியா இதுவரை தனது நிலைப்பாட்டை உறுதிபட தெரிவிக்கவிக்காத நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடுத்த வாரம் மாஸ்கோ செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷ்யா சென்று திரும்பியதை அடுத்து ஆகஸ்ட் மாதம் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் ரஷ்யாவின் கசன் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடி செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அஜித் தோவலின் இந்த பயணம் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதன் அடுத்தகட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.
உக்ரைனுடன் மத்தியஸ்தம் செய்ய அழைக்கும் புடின்… அழைப்பை ஏற்பாரா மோடி ?