டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகிய அறக்கட்டளைகள் ஒருமனதாக நிறைவேற்றியிருந்தன.

அந்த தீர்மானம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை என்றும் மறுபரிசீலனை செய்யப்படவில்லை என்றும் அறங்காவலர்கள் கூறினர்.

துணைத் தலைவர்கள் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் உள்ளிட்டோர், சந்திரசேகரன் தலைமையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர்.

பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட டாடா டிரஸ்டின் தலைவர் நோயல் டாடா சில கேள்விகளை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் Air India இழப்புகள், BigBasket போன்ற புதிய வணிகங்களின் செயல்திறன் மற்றும் முதலீட்டு ஒழுங்கு குறித்து அவர் விளக்கம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், Tata Sons நிறுவனம் தனியார் நிறுவனமாகவே தொடருமா என்பதிலும் தெளிவான உறுதி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tata Sons நிறுவனத்தின் சுமார் 66% பங்குகளை Tata Trusts வைத்துள்ளது.

தலைவரை ஆதரிக்கும் அதே வேளையில், இயக்குநராக நோயல் டாடாவால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து உரிய மதிப்பீடுகள் செய்து தேவையான இடங்களில் சரியான நடவடிக்கைகளை எடுக்க அறங்காவலர்கள் ஒப்புக்கொண்டனர்.

Air India, Tata Digital மற்றும் Tata Electronics போன்ற நிறுவனங்கள் இன்னும் முதலீட்டு கட்டத்தில் இருப்பதால், தலைமையில் தொடர்ச்சி முக்கியம் என அறங்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

டாடா சன்ஸ் இயக்குநர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் மூன்றாவது பதவிக்கால முன்மொழிவை வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினர். இருப்பினும், டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு இதுகுறித்து முடிவு செய்யலாம் என்று சந்திரசேகரன் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது,

இந்நிலையில், 2022-ல் டாடா சன்ஸ் நிறுவனத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்நிலை நிதி நிறுவனமாக (NBFC) வகைப்படுத்தி, 2025க்குள் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்று கூறியது.

இதற்கு விதிவிலக்கு கோரி நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை.

இதனால் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

2017ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற என். சந்திரசேகரன் 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தனது இரண்டாவது ஐந்தாண்டு காலத்தைத் தொடங்கினார்.

மார்ச் 3 அன்று ஜம்ஷெட்பூரில் நடைபெறும் நிறுவனர் தின நிகழ்ச்சியில் நோயல் டாடா மற்றும் என். சந்திரசேகரன் இருவரும் ஒன்றாக கலந்து கொள்ள உள்ளனர். அந்த நிகழ்வு, நிறுவனத்தின் உள்நிலை ஒற்றுமையை காட்டும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]