டில்லி,
எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்டு மாதம் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மின்றம்.
முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மாபா.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, இதுகுறித்து சட்ட உதவி வழங்குமாறு அட்டர்னி ஜெனரலை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது.
ஆனால், அவர் இந்த வழக்கில் ஏற்கனவே தான், ஓபிஎஸ் அணியினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளதால், தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை வழங்க முடியாது என மறுத்து விட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் வாதாடினார்.
அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின், 212வது பிரிவின் கீழ், சட்டசபை தொடர்பான விவகாரத்தில் கோர்ட் தலையிடக்கூடாது என கூறினார். மேலும் இந்த வழக்கு குறித்து ஆராய கால அவகாசம் தேவை என்று கோரியதை தொடர்ந்து, வழக்கு ஆகஸ்ட் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.