அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றிபெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2025 ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள டிரம்பின் இந்த வெற்றி அமெரிக்க வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றிருந்தால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் முதல் கறுப்பின பெண் ஜனாதிபதியாகவும் சரித்திரத்தில் இடம்பிடித்திருப்பார்.
இருந்தபோதும் டொனால்ட் டிரம்ப் வெற்றி நான்கு விதங்களில் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிக வயதில் அதிபர்
ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்கும் போது அமெரிக்க அதிபராக பதவியேற்கும் மிக அதிக வயதுடையவர் என்ற பெருமையை டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்துவார்.
தற்போதய அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ள நிலையில் 78 வயதாகும் டிரம்ப் ஒரு சில மாதங்கள் வித்தியாசத்தால் அந்த சாதனையை முறியடிக்க உள்ளார்.
அதேவேளையில், துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள 40 வயது ஜே டி வான்ஸ் இளம் வயதில் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் முறையாக அதிபர் பதவி
ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதவி வகித்த பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் டிரம்ப் இடம்பெற்றுள்ளார்.
45வது ஜனாதிபதியாக இருந்த அவர், தற்போது 47வது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
ஆனால் தொடர்ச்சியாக அதிபராக இல்லாமல் இடைவெளிவிட்டு மீண்டும் அதிபராக பதவியேற்பவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார் டிரம்ப்.
இதற்கு முன், 1884 மற்றும் 1892 ஆகிய தேர்தலில் வெற்றி பெற்ற க்ரோவர் கிளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22வது மற்றும் 24வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
குற்றவியல் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க அதிபர்
குற்றவியல் தண்டனை பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றை பதிவிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
2016 தேர்தலில் செல்வாக்கை அதிகரிக்க கவர்ச்சி நடிகையுடன் உல்லாசமாக இருக்க பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளிலும் அவரை குற்றவாளி என்று நியூயார்க் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அதிபர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் போது இரண்டு முறை பதவி நீக்க நடவடிக்கையை சந்தித்த ஒரே அதிபர் டிரம்ப் என்பதும் இரண்டு முறையும் செனட் உறுப்பினர்களால் அனைத்து வழக்குகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.