வாஷிங்க்டன்

மெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரியாவிடை பெறுவதாகவும் (Thank you and good bye) குறிப்பிட்டுள்ளார். இது சீனா – அமெரிக்கா உறவை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஜி சின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஃப்ளோரிடாவில் சந்தித்து, அமெரிக்க – சீனா வர்த்தகம் பற்றியும் வட கொரியா பற்றியும் விவாதித்தனர்.  சந்திப்பின் முடிவில் சீனாவுடனான அமெரிக்க உறவு அருமையாக வளர்வதாகவும் தனக்கும் சீன அதிபருக்கும் இடையிலான நட்பு ஈடுஇணையற்றது எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

நேற்று, அமெரிக்காவின் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் ஜேம்ஸ் மாட்டிஸ் சீனாவின் யங்க் ஜியெச்சி மற்றும் ஃபங்க் ஃபெங்க்யி ஆகியோரை வாஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.   வட கொரியாவுக்கு சீனா ஆதரவு தருவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிகிறது.

இதற்குப் பின் ட்ரம்ப் இது போல ஒரு ட்விட்டர் செய்தி வெளியுட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஓட்டோ வாரம்பியர் என்னும் மாணவர் சமீபத்தில் வடகொரியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அதன் பின் அவர் அமெரிக்காவில் மரணம் அடைந்ததும் தெரிந்ததே.  இதற்கு ட்ரம்ப் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஏவுகணைகள் சோதனைக்கும் ட்ரம்ப் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வட கொரியாவுக்கு சீனா ஆதரவு தருவதால் இது போல செய்தி வெளியிட்டிருக்கலாம் என அமெரிக்க அரசின் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சீனா தான் வட கொரியாவை ஆதரிக்கவில்லை என்றும், ட்ரம்ப்பின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் இன்று வரை வட கொரியாவின் வர்த்தக பங்குதாரர்களில் முக்கியமானது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.