அமெரிக்க விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பம்பர் அறுவடை வந்தபோதும், பயிர்களை விற்க முடியாமல் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.
ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாக, விவசாயிகள் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களில் நம்பிக்கை குறைந்துள்ளனர்.
வர்த்தகப் போர்கள், குடியேற்ற கட்டுப்பாடுகள், பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள் போன்ற காரணங்களால் அமெரிக்கா முழுவதும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை, மத்திய மேற்கு பகுதிகளில் பயிர்களை விற்க முடியாமை, மற்றும் சேமிப்பிடங்கள் பற்றாக்குறை விவசாயிகளை பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வரிவிதிப்பு காரணங்களுக்காக அமெரிக்க சோயாபீன்களை வாங்க மறுக்கும் முன்னணி வாடிக்கையாளரான சீனா அவற்றை பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது, இதனால் ஏற்றுமதி சந்தை மூடப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை குறைந்தாலும், உரம், விதைகள், உபகரணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பண்ணை திவால்நிலைகள் 55% அதிகரித்தது, இது 2025 முதல் காலாண்டில் மேலும் உயர்ந்துள்ளது. இதனால் அரசை நம்பி விவசாயத்தில் ஈடுபடாத விவசாயிகள் கூட தற்போது அரசை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“அமெரிக்க விவசாயத்தின் பொற்காலம்” வரப்போவதாக அளித்த வாக்குறுதியை நம்பி கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவளித்த பெரும்பாலான விவசாயிகள் தற்போது அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.
மேலும், விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதற்கு அரசே காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை முடிவே இல்லாமல் டிரம்ப் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் பண்ணை பாதுகாப்பு நிதி அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு வராது என்றும் கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் உயிர்வாழ உடனடியாக அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கா முழுவதும் வலுத்து வருகிறது.