நியூயார்க்:
இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறை தடுமாற்றத்தைக் குறைக்க அமெரிக்க அதிபர் ரொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 891 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சீனப் பொருட்களின் இறக்குமதி வரி விதிப்பை குறைத்தபோதிலும், அந்நாட்டுடனான வர்த்தகப் பற்றாக்குறை 419 பில்லியன் டாலராக உள்ளது.
இதற்கிடையே, கடந்த 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இடைவெளியில் ஒட்டுமொத்த சரக்கு மற்றும் சேவை பற்றாக்குறை 19% அதிகரித்துள்ளது.
அதாவது, 59.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச வர்த்தக பற்றாக்குறையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ட்ரம்பின் முதல் வர்த்தகம் சார்ந்த கொள்கை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அமெரிக்கர்கள் ஏற்றுமதி செய்வதைவிட,வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதே அதிகமாக உள்ளது. ஏற்றுமதி அளவு 6.3% அதிகரித்திருக்கும் நிலையில், இறக்குமதி அளவு 7.5% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதனை குறைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடவடிக்கையை பல பொருளாதார நிபுணர்கள் ஏற்கவில்லை. இத்தகைய நடவடிக்கை அமெரிக்க வர்த்தக உறவில் பிரதிபலிப்பதைவிட, பல்வேறு பொருளாதார அம்சங்களை பாதிப்படையச் செய்துவிடும் என்று எச்சரித்துள்ளனர்.