வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக, வரும் நாட்களில் அதிக அமெரிக்கர்கள் மரணிக்க வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளதானது அந்நாட்டில் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில், கொரோனா தொற்றால் உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது அமெரிக்கா. மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில், பலியானோர் எண்ணிக்கை 8500 ஐ நெருங்குகிறது.

டிரம்ப் கூறியதாவது, “அனைத்து மருத்துவமனைகளுக்கு மருந்துகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். பிற மாகாணங்களிலிருந்து நோயாளிகளை நியூயார்க், வாஷிங்டன் மற்றும் டல்லாஸ் மாகாண மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்டெடுக்க நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன். இதற்காக ராணுவத்தையும் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பல மாகாணங்களில் இருந்து செவிலியர்கள், மருத்துவர்கள், மற்ற தேவையான பணிகளை செய்யும் நபர்கள் என்று பலரையும் களமிறக்க போகிறோம். நாம் ஒரு போருக்கு செல்கிறோம்.

இதை நாம் இன்னும் நீட்டிக்கவிடக் கூடாது. நாம் சீக்கிரம் நமது நாட்டை இயங்கச் செய்ய வேண்டும். நாம் ஊரடங்கை இன்னும் பல மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது. நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நம் பொருளாதாரம் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இதுவரை வரலாற்றில் சந்திக்காத ஒரு சூழ்நிலையை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். மிக மோசமான நாட்கள் நமக்காக காத்திருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வரும் வாரங்களில் அமெரிக்கர்கள் பலர் பலியாக வாய்ப்புள்ளது” என்றார் டொனால்டு டிரம்ப்.