வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பென்சில்வேனியா மாகாண முடிவுகளை எதிர்த்து, தற்போதைய அதிபர் டிரம்ப தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாகாண தேர்தல் தோல்வியை எதிர்த்து, டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் மாகாணப் பிரதிநிதிகள் குழுவின் 20 ஓட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அது ஜோ பைடனுக்கு கிடைத்தது. டிரம்ப் தொடர்ந்த வழக்கை கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், டிரம்ப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவும், தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியதாவது, “தேர்தல் முடிவுகளை, வாக்காளர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். வழக்கறிஞர்கள் அல்ல. வெளிப்படையான தேர்தல் நடத்தப்படுவதுதான் நம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லாமல், மோசடி நடந்துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர டொனால்ட் டிரம்ப் தரப்பு முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.