வாஷிங்டன்: கொரோனா வைரசை தெரிந்தே பரப்பியிருந்தால், சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை 37 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். உலகிலேயே அதிகபட்சமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு உகானில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதுமே, சீனா வெளிப்படையான தகவல்களை அளிக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
அதன் நீட்சியாக சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, உலக சுகாதார நிறுவனத்துக்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்துவதாக அண்மையில் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவ துவங்குவதற்கு முன் சீனாவில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி நிகழாததால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறு. ஆனால் அவர்கள் தெரிந்தே செய்திருந்தால் பின்விளைவுகள் இருக்கும் என்பது உறுதி என்றார்.
மேலும் சீனாவின் உகானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து கொரோனா பரவ துவங்கியதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அது குறித்து தனது அரசு விசாரிக்க இருப்பதாகவும், சீனாவின் கொரோனா இறப்பு விகிதம் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.