அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபராக போட்டியிட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து என்பிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தம் ஜனாதிபதி பதவிக்கால வரம்புகளை நிர்ணயிக்கிறது. எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று அது கூறுகிறது.
இந்த நிலையில், “எனக்கு வேலை செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று, நான் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்” என்று கேள்வி ஒன்றுக்கு அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அனுமதிப்பது குறித்து விவாதித்தீர்களா என்று கேட்டபோது, பல வழிகள் இருப்பதாகக் கூறிய டிரம்ப் “அதற்கு நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும்,” என்று கூறினார்.
“துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ் தேர்தலில் போட்டியிட்டு, பின்னர் அந்தப் பதவியை உங்களிடம் விட்டுக்கொடுக்க முடியுமா ?” என்று கேட்டதற்கு, “அது ஒரு வழி முறை” என்று மட்டுமே பதிலளித்த டிரம்ப் “வேறு என்ன வழி முறை” என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்க அதிபரின் இந்த பேட்டி அவர் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் நீடிக்க விரும்புவதை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததை அடுத்து அமெரிக்க அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.