வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், சீனக் கொடிகளால் மூடப்பட்ட அல்லது பறக்கவிடப்பட்ட அமெரிக்க  ஜெட் விமானங்கள் மூலம் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துங்கள் என உக்ரைன் விஷயத்தில் அதிபர் பைடனுக்கு முன்னாள் அதிபர் டொனால்டு  டிரம்ப் நக்கலாக யோசனை தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சி நன்கொடையாளர்களுக்கான நிகழ்வில் கலந்து கண்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவின் கொடிகளால் மூடப்பட்ட ஜெட் விமானங்களுடன் ரஷ்யாவை அமெரிக்க குண்டுவீசி தாக்கும் என   சிரிப்புடன் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிபர் டிரம்ப், மனிதநேயத்திற்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருகிறது ஆனால், அதிபர் பைடன் “ரஷ்யா மீது எந்தக் காரணத்தை கொண்டும் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறி வருகிறார்.  அவர்  இப்படி பேசுவதைநிறுத்த வேண்டும் என்று கூறியதுடன், இந்த விஷயத்தில் நேட்டோ என்பது வெறும் காகிதப் புலியாகவே செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்தார்.

பின்னர் அதிபர் பைடன் குறித்து பேசியவர், தற்போதைய நிலையில்,  உக்ரைன் போரை நிறுத்த ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்றவர், அமெரிக்க போர் விமானங்களில் சீனக் கொடிகளை பறக்கவிட்டு அல்லதுரு சீனக்கொடிகளால் மூடிக்கொண்டு  ரஷ்யா மீது குண்டுகளை வீச வேண்டும். பிறகு ரஷ்யாவும், சீனாவும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும். நாம் நிம்மதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்கலாம்” என நக்கலாக கூறினார். இதனால் அங்கு கூடியிருந்தோர் சிரித்து மகிழ்ந்தனர்.