வாஷிங்டன்; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்து உள்ளார். மேலும் பல பொருட்களுக்கு கண்மூடித்தனமாக வரிகளை உயர்த்தி உள்ளார்.
இது டிரம்பின் வரி சுனாமியாக பார்க்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதுமுதல், சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தங்கி பணியாற்றுபவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக விசாக்களுக்கான கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான அளவுக்கு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 50சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், துணி தயாரிப்பு உள்பட பல நிறுவனங்கள் செய்வதறியாது திகைத்து உள்ளன.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை இந்திய மருந்து பொருட்களுக்கு வரி விதிக்காத டிரம்ப் அரசு, தற்போது 100 சதவிகிதம் வரி விதித்துள்ளது, இந்திய மருந்து நிறுவனங்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து நிறுவனங்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் சமையலறை உபகரணங்கள், குளியலறை பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்றும், வீடுகளில் பயன்படுத்தப்படும் குளியலறை சாதனங்கள், பல்வேறு விதமான இருக்கை உபகரணங்களுக்கும், அலங்கார பொருட்களுக்கும் 30% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் கனரக டிரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என இறக்குமதி வரிகளை உயர்த்தி உள்ளதுடன், வட்டி விகிதங்களை 2 சதவிகிதம் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால், இந்திய மருந்து நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளன.