வாஷிங்டன்

கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா பாதிப்புக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரை செய்தது.  அதையொட்டி இந்தியத் தேவைக்காக இந்த மாத்திரைகள் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது.

அமெரிக்காவுக்கு இந்த மாத்திரை தேவைகள் அதிகம் இருந்ததால் இந்தியாவுக்கு ஆர்டர் வழங்கி இருந்தது.   ஏற்றுமதி தடையால் மாத்திரைகள் கிடைக்காது என்பதால் தடையை விலக்கக் கோரி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டார்.  மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை.

இதையொட்டி டிரம்ப் இந்தியா மாத்திரைகளை ஏற்றுமதி செய்யாவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.  அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அரசு மனித நேய அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாகத் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து, “இதுவரை நாங்கள் லட்சக்கணக்கில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வாங்கி உள்ளோம்.  இன்னும் 2.90 கோடி மாத்திரைகள் உடனடியாக வாங்க உள்ளோம்.  இந்த சூழலில் நண்பர்களுக்கிடையே ஒத்துழைப்பும் உதவியும் அவசியமாகும். இந்தியாவின் உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்.  இந்திய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.