அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்ப தேவையான சில திறமைகள் கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெளிநாட்டு திறமையாளர் விசா (H1-B) திட்டம் அவசியம் என்றும் “அமெரிக்காவில் சில தொழில்துறை திறமைகள் குறைவாக உள்ளதால், வெளிநாட்டு நிபுணர்களை நாடுவது தவிர்க்க முடியாதது” என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் H1-B விசா கட்டணத்தை பலமடங்கு உயர்த்திய டிரம்ப் AI மூலம் அனைத்து வேலைகளையும் செய்ய தயாராக அமெரிக்க நிறுவனங்களை அறிவுறுத்தினார்.

AI-யே அனைத்தையும் கவனித்துக் கொண்டால் அரசு கஜானாவுக்கு வரியாக பணம் மட்டும் எப்படி வந்து சேரும் என்று இந்நிறுவனங்கள் கேள்வி எழுப்பின.

இந்த நிலையில் Fox News சேனலுக்கு அளித்த பேட்டியில், டிரம்ப் கூறியதாவது:

“அமெரிக்காவில் சில திறமைகள் இல்லாததால், அந்த வேலைகளை நிரப்ப வெளிநாட்டு நிபுணர்கள் தேவை. வேலை இழந்த ஒருவரை நேரடியாக ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் வைத்து விட முடியாது. அதற்கென சிறப்பு திறமைகள் வேண்டும்,” என்றார்.

Fox தொகுப்பாளர் லாரா இங்க்ரஹாம், “நம்மிடம் போதுமான திறமையானவர்கள் உள்ளனர்” எனச் சொன்னபோது, டிரம்ப் உடனே “இல்லை, நம்மிடம் சில திறமைகள் இல்லை. அதைப் பெற கற்றுக்கொள்ளவேண்டும்” என மறுத்தார்.

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமைச் சோதனையில், சட்டவிரோத குடியேற்றக் குற்றச்சாட்டில் தென்கொரிய தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்ட டிரம்ப், “அவர்கள் பேட்டரி உற்பத்தியில் நிபுணர்கள். அது மிகவும் சிக்கலானது, ஆபத்தானது. அத்தகைய திறமையாளர்களை வெளியேற்றுவது தவறு,” என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன், அதே சோதனையை அவர் “தவறான நடவடிக்கை” என விமர்சித்திருந்தார்.

அமெரிக்க நிறுவனங்கள் போட்டித் திறனைத் தக்கவைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறும் H1-B விசா, தற்போது 3 ஆண்டுகள் செல்லுபடியாகும் மற்றும் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

சமீபத்தில் டிரம்ப் அரசு, இந்த விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை $1 லட்சம் (100,000 USD) ஆக உயர்த்தும் உத்தரவையும் பிறப்பித்தது. இது குடியேற்றக் கொள்கையில் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒன்று என்று விமர்சிக்கப்பட்டது.

மேலும், சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்வது குறித்த கேள்விக்கு, டிரம்ப், “வெளிநாட்டு மாணவர்கள் இருப்பது நல்லது, ஆனால் சிலர் நமது அறிவுசார் சொத்துக்களை திருடுகிறார்கள்” எனவும், பிரான்ஸ் குறித்த கேள்வியில் “பிரெஞ்ச் மக்கள் சிறந்தவர்களா என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியாது” எனவும் கூறினார்.