வாஷிங்டன்

மெரிக்க உச்சநீதிமன்றம் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடுத்த வழக்கை ரத்து செய்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவித்த போதிலும் தற்போதைய அதிபர் டிரம்ப் இதுவரை தனது வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் உள்ளார்.   மேலும் ஜோ பைடன் மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளதாகக் கூறி வரும் அவர் தொடர்ந்து ஒவ்வொரு மாகாண நீதிமன்றத்தில் பைடன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வருகிறார்.

டிரம்பின் வழக்கு அனைத்து நீதிமன்றத்திலும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோல்வியைத் தழுவி வருகின்றன.  அமெரிக்கச் சட்டத்தின்படி வாக்காளர்களின் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியாது என்பதே தீர்ப்புகளில் சொல்லப்பட்டு வருகின்றன.  இறுதியாக அவர் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார்.

உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் சார்பில் அளிக்கப்பட்ட வழக்கு மனுவில் பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கோன்சின் மற்றும் ஜார்ஜியா ஆகிய மாநிலங்களின் ஜோ பைடனின் தேர்வை எதிர்த்து அவருடைய வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.   இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. 

இந்த விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்ட தீர்ப்பில், ”டெக்ஸாஸ் மாகாணத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் ஜோ பைடனின் வெற்றியை அரசியலமைப்பு சட்டத்தின் விதி எண் 3 இன் படி செல்லாது என அறிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.  ஆனால் அந்த தீர்மானம் அந்த மாகாணத்தில் நடந்த தேர்தல் குறித்த தீர்மானமே தவிர மற்ற மாநிலங்களை அது கட்டுப்படுத்தாது” எனக் கூறி வழக்கை ரத்து செய்துள்ளது.

தோல்வியை ஒப்புக் கொள்ள மனம் இல்லாத டிரம்ப் எடுத்த கடைசி முயற்சியும் தற்போது தோல்வி அடைந்துள்ளதால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.