ஹோர்முஸ் நீரிணை அருகே இந்திய பணியாளர்கள் இருந்த கப்பல்களை ஈரான் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைதளமான Truth Social-இல் வெளியிட்ட பதிவில், வெள்ளிக்கிழமை இரவு இந்தியர்களுடன் சென்ற கப்பல்களை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும், ஈரானின் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் டிரம்பின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் இல்லாதவை என்று தெரிவித்துள்ள ஈரான், சமீபத்தில் இந்தியர்கள் இருந்த கப்பல்களின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது.

சமீபத்தில் ஓமான் கடற்கரை அருகே இந்திய பணியாளர்கள் இருந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அந்த தாக்குதலில் ‘செட்பெல்லோ’ (Setbello) என்ற கப்பலில் இருந்த மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததுடன், கப்பல்களை தாக்குவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் இருந்த கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் குறித்து அமெரிக்கா இதுவரை நேரடி விளக்கம் அளிக்கவில்லை. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் முன்பு விளக்கம் அளித்திருந்தது.

அமைதி ஒப்பந்தம் குறித்து மீண்டும் குழப்பம்

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதி ஒப்பந்த வரைவை ஏற்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் முன்பு தெரிவித்த நிலைப்பாட்டுக்கும் தற்போது முன்வைத்துள்ள திட்டத்துக்கும் முரண்பாடு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையான அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக ஈரான் முன்பு சம்மதம் தெரிவித்திருந்தாலும், தற்போது அதன் நிலைப்பாடு மாறியுள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை மீது தனது கட்டுப்பாடு தொடரும் என்றும், யுரேனியம் செறிவூட்டுவது தனது உரிமை என்றும் ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், அமெரிக்கா–ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]