அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸை தன்னுடன் விவாதத்துக்கு வருமாறு குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடக் களமிறங்கிய ஜோ பைடன் உடல்நிலையை காரணமாகக் கூறி போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்கனவே விவாதம் நடைபெற்ற நிலையில் இவர்கள் இருவருக்குமான அடுத்த விவாதம் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி தொலைக்காட்சியில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகியதை அடுத்து கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
கமலா ஹாரிஸ் தனது பங்கிற்கு டிரம்ப்-புடன் விவாதிக்க தயார் என்று கூறிய நிலையில் அவர் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் இதுகுறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நேற்று கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ள டிரம்ப் செப்டம்பர் 4ம் தேதி பாஃக்ஸ் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
பாஃக்ஸ் தொலைக்காட்சி டிரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சி என்றும் அது விவாதமாக இருப்பதற்கு பதில் டிரம்ப்-பின் பிரச்சார ஒளிபரப்பாத் தான் இருக்கும் என்று கமலா ஹாரிஸ் தரப்பினர் விமர்சித்துவருகின்றனர்.
இந்த நிலையில் டிரம்ப்-பின் அழைப்பை ஏற்று செப்டம்பர் 4ம் தேதி பாஃக்ஸ் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த கமலா ஹாரிஸ் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.