பொருளாதார மந்த நிலையில் இருந்து உயர்த்த எதை தின்றால் பித்தம் தணியும் என்ற நிலையில் அமெரிக்கா உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அமெரிக்க பொருட்கள் மீது அந்தந்த நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப இறக்குமதி வரியை நிர்ணயிக்க தேவையான சூத்திரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரண்டரை மாத ஆட்சியில் கண்டுபிடித்துள்ளார்.

அந்த சூத்திரத்தின்படி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% அடிப்படை வரி உயர்வும் பட்டியலிடப்பட்ட நாடுகளுக்கு கூடுதலாக 10 முதல் 49 சதம் வரை வரி உயர்வை அறிவித்தார்.

இதில் உலகின் முன்னணி வர்த்தக நாடுகளான சீனா, தைவான், வியட்நாம், கம்போடியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 26% வரி உயர்வும், சீனாவுக்கு 34% வரி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 8ம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியான உடன் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா 34% உயர்த்தியது.

சீனாவின் இந்த அறிவிப்பால் பித்தம் தலைக்கேறிய அமெரிக்கா சீனா தனது வரி உயர்வை திரும்ப பெறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.

இந்த நிலையில், சீன பொருட்களுக்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜிங்பிங், “அமெரிக்கா தவறுக்கு மேல் தவறு செய்து வருவதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சீனா தனது சொந்த உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும்” என்று எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இந்த வர்த்தக மோதலால் ஏற்கனவே உலக நாடுகளின் பங்குச் சந்தையுடன் சேர்ந்து இந்திய பங்குச் சந்தை படுபாதாளத்தில் விழுந்துள்ள நிலையில், சீனா – அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் இந்த வர்த்தக மோதல் உலக பொருளாதாரத்தையே சீரழிக்கும் என்று கூறப்படுகிறது.