வாஷிங்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வீட்டை சுற்றி 10 அடி உயர சுற்றுச் சுவர் உள்ளதாக டிரம்ப் கூறியது பொய் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோ நாட்டுக்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான சுவர் ஒன்றை எழுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனால் அந்த சுவர் தேவை அற்றது எனவும் சுவர் எழுப்புவது வீண் செலவு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆயினும் டிரம்ப் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ”முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவர் மனைவி வசித்து வரும் இல்லத்தில் 10 அடி உயர சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ள்து. அவர்களுடைய பாதுகாப்புக்கு அது தேவை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். அதைப் போலவே அமெரிக்கா தனது பாதுகாப்புக்காக சற்றே பெரிய ஒரு சுவரை அமைக்க உள்ளது” என பதிந்திருந்தார்.

அமெரிக்க ஊடகங்கள் இது தவறான தகவல் என தெரிவித்துள்ளன. இது குறித்து அங்கு வசிக்கும் ஒருவர், “வீட்டின் முன்பு ஒரு சிறிய வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச் சுவர் கிடையாது. சாலையில் இருந்து ஒபாமாவின் இல்லம் பார்க்கும் படியாக உள்ளது. டிரம்ப் கூறிய தகவல் உண்மைக்கு புறம்பானது.” என தெரிவித்துள்ளார்.

அதே பகுதியில் வசிக்கும் மற்றொருவர், “ஒபாமா வீட்டில் வேலி மட்டுமின்றி வாசலில் காவலும் உண்டு. ஆனால் சாலையில் இருந்து அனைவராலும் வீட்டுக்கு வரும் படிக்கட்டுக்கள் வரை காண முடியும். டிரம்ப் கூறியது போல எந்த ஒரு சுற்றுச் சுவரும் எழுப்பப்படவில்லை” என உறுதி படுத்தி உள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் எழுப்பட உள்ள சுவரின் உயரம் சுமார் 30- 40 அடி உயரமாக இருக்கும் எனவும் பல மைல்கள் தூரத்துக்கு எழுப்படும் எனவும் தெரிய வந்துள்ளது. அதை ஒட்டி அமெரிக்க ஊடகங்கள் டிரம்ப் கூறியது போல அவருடைய கற்பனை சுவற்றை விட சற்றே பெரிய சுவராக எல்லைச் சுவர் இருக்காஅது என தெரிவித்துள்ளது.