வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் அதை உச்சநீதிமன்றம் விசாரிக்குமா என டிரம்ப் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் ஆகியோர் களத்தில் மோதினர். தேர்தல் முடிவுகளின்படி ஜோ பைடன் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுவரை டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி வருகிறது.
இது குறித்து அவர் அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாண நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குகள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டு டிரம்பின் தோல்வியை அறிவித்து வருகின்றன. இறுதியாக நேற்று முன் தினம் பென்சில்வேனியா மாகாண நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அசராத டிரம்ப் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளார். நேற்று இது குறித்து அவர், “உச்சநீதிமன்றத்தில் இந்த அதிபர் தேர்தல் மோசடி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது. என்னிடம் அருமையான வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வழக்கில் வாதாட ஆர்வமாக உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது சந்தேகம் என தெரிவித்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.