அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவைத் துறையில் (Internal Revenue Service – IRS) நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் நாட்டின் பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமை மனிதவள அதிகாரி, செயல் ஆணையர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர். எனினும் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் (மே) நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.