அமெரிக்கா:

மெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கரோனா வைரஸின் கோர பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர், இதனால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 5ஆயிரத்து 110ஆக அதிகரித்துள்ளது.

ஜான்ஸ் ஹோப்கின்ஸ் கொரோனாவைரஸ் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.15 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,110ஆகவும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் ஊடங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போரிட்டு வெற்றி பெறும். எவ்வளவு மோசமான வைரஸ் என்று பார்த்தீ்ர்களா, எத்தனை ஆயிரம் உயிர்களை கொன்றுள்ளது.

இதுநாள் வரை பார்த்திராத மோசமான சூழலை மக்கள் பார்த்து வருகிறார்கள். எங்கள் கணிப்பின்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் வரை கரோனா வைரஸால் இறக்கக்கூடும். ஆனால், அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 2.70 கோடி மக்கள் வேறு வழியின்றி வீட்டுக்குள் 30 நாட்கள் முதல் 70 நாட்கள் இருக்குமாரு வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அனைத்துப் பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், சுற்றுலாத் தளங்களும் வேறுவழியின்றி மூடப்பட்டுள்ளன. இந்த வைரஸை அழிக்க ஒவ்வொரு வழியிலும் அமெரிக்க அரசு போராடி வருகிறது. சமூக விலக்கல் தான் இந்த வைரஸை ஒழிக்க சிறந்த வழி. மக்களுக்கு பொருளாதார உதவி, மருத்துவ உதவி அளித்து வருகிறோம். வெளிநாடுகளுக்கு பயணிப்பதை தடை செய்துள்ளோம்.

மற்ற நாடுகளைப் போன்று நாடுமுழுவதும் லாக்-டவுன் கொண்டுவர விரும்பவில்லை. ஒவ்வொரு மாநிலமும் அதற்கான முடிவை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அமெரிக்க மக்கள் ஒவ்வொருவரும் அடுத்த 30 நாட்களுக்கு கடுமையாக சமூக விலக்கலை பின்பற்றுவது அவசியம், அப்போதுதான் இந்த வைரஸ் பரவுவதைத்தடுக்க முடியும்

உள்நாட்டளவில் இப்போது விமானப் போக்குவரத்து நடந்து வருகிறது. குறிப்பாக நியூயார்க், டெட்ராய்ட் ஆகியவற்றுக்கு இடையே விமானப்போக்குவரத்து இருக்கிறது. கரோனா வைரஸ் பரவுவதை இன்னும் கட்டுப்படுத்த உள்நாட்டு விமானப் போக்குவரத்தை குறைக்க முடிவு செய்துள்ளேன். குறிப்பாக கரோனா வைரஸ் அதிகமான பாதிப்பு ஏற்படுத்த நகரங்களுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்த ஆலோசித்து வருகிறோம்.

கரோனா வைரஸ் பரவுவதைக் கடுப்படுத்த அனைத்து உள்நாட்டு விமானசேவையையும் தற்காலிகமாக ரத்து செய்யவும் ஆலோசித்து வருகிறோம். ரயில் போக்குவரத்திலும் இதே போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறோம். இப்போது விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் கரோனாவைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அவசியம். அனைத்து போக்குவரத்தையும் முடக்கும் சூழல் ஏற்படும் போது அது கடினமாகிவிடும்.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்