அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் மயிரிழையில் உயிர்தப்பினார்.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொதுக்கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியே உயரமான இடத்தில் இருந்து டிரம்ப்பை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி குண்டு டிரம்பின் காதுக்கு மேல் அவரை உரசிச் சென்றது இதில் பார்வையாளர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து டிரம்ப்-பை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்ற அவரது பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கி குண்டு வந்த திசையை நோக்கி சுட்டதில் மர்ம நபரும் கொல்லப்பட்டார்.

அமெரிக்க காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க தாமஸ் மாத்யூ க்ருக்ஸ் என்பது தெரியவந்தது.

டிரம்ப் மீதான இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெலாவரில் உள்ள கடற்கரையில் ஓய்வு எடுக்க சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் மாளிகை திரும்பியதோடு டிரம்ப் மீதான தாக்குதல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.