வாஷிங்டன்

மெரிக்க அதிபர் டிரம்ப் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப எலான் மஸ்க் உதவியை நாடி உள்ளார்.

கடந்த 2024 ஆம் வருடம் ஜூன் 5  அன்று விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். இருவரும் எட்டு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

அவர்கள் 10 நாட்களில் ஆய்வு முடித்துவிட்டு பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அனுப்பிவைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த பிறகு, ‘ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் பாதிப்பு இருப்பதும், அதில் அவர்கள் பூமிக்கு திரும்புவது சாத்தியமில்லை என்பதும் தெரியவந்தது. எனவே அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்துவர டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கின் உதவியை நாடியுள்ளார்.

டிரம்ப் சமூக வலைத்தளத்தில்,

“ஜோ பைடன் நிர்வாகத்தால் விண்வெளியில் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட 2 துணிச்சலான விண்வெளி வீரர்களை அழைத்து வர எலான் மஸ்க்கை கேட்டுள்ளேன். பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் காத்திருக்கும் அவர்கள் இருவரையும் எலான் மஸ்க் விரைவில் அழைத்து வருவார்”

என்று பதிவிட்டிருந்தார்.

டிரம்ப் தன்னிடம் உதவி கேட்டதை உறுதி செய்துள்ள எலான் மஸ்க், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் விரைவில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.