சிங்கப்பூர்
வட கொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் அடுத்த மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான பகை இருந்து வந்தது. வட கொரியா அணு ஆயுத சோதனைகள் நிகழ்த்துவதாக கூறி அமெரிக்கா வட கொரியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்தது. வட கொரியாவும் அமெரிக்கா மீது ஆயுதத் தாக்குதலை நிகழ்த்துவதாக மிரட்டியது. இந்நிலையில் இரு நாடுகளும் தற்போது இறங்கி வந்துள்ளன.
அமெரிக்க அதிபரை வட கொரிய அதிபரின் பிரதிநிதிகள் வெள்ளை மாளிகைக்கு சென்று அவரை வட கொரிய அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர். அவரும் அதை ஒப்புக் கொண்டார். அமெரிக்க உளவுத்துறை அதிகாரி வட கொரியா சென்று பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்துரையாடல்கள் நிகழ்த்தினார். இந்த பேச்சு வார்த்தை சரித்திரப் புகழ் வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் நிகழும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் அமெரிக்க அதிபரிடம் கேட்ட போது அவர், “விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும்” என கூறி உள்ளார். இந்த சந்திப்பு வரும் ஜூன் மாதம் மத்தியில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளதாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.