கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து காவல்துறையினர் ரூ.6,53,100 அபராதம் விதித்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்திலேயே இதுதான் அதிகபட்சம் என்று கூறப்படுகிறது.
நாகலாந்து பதிவு எண்ணைக் கொண்டிருந்த அந்த லாரியானது, கடந்த 2014ம் ஆண்டு முதல் காலாண்டு வரியை செலுத்தவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த லாரியை போக்குவரத்து காவல்துறையினர் வழிமறித்து விசாரித்தபோது, வரி கட்டியதற்கான எந்த ஆவணங்களையும் ஓட்டுநர் சமர்ப்பிக்கவில்லை.
அந்த லாரி ஓட்டுநர் பல வகைகளில் புதிய சட்டத்தை மீறியிருந்தார். அவரிடம் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லை, காப்பீடு மற்றும் உரிமம் போன்றவை இல்லை. ஆனால், லாரியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தார் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, வரி பாக்கியாக ரூ.6,40,500ம், பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த காரணத்திற்காக தலா ரூ.5000ம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனையடுத்து மொத்த அபராதத் தொகையாக ரூ.6,53,100 கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.