ஐதரபாத்: தெலுங்கானாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் 100 இடங்களில் டிஆர்எஸ் அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில் 120 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள், 9 மாநகராட்சி தேர்தல்கள் கடந்த ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
120 நகராட்சிகளுக்கும் 9 மாநகராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவில், டிஆர்எஸ் அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.
ஆளும் டிஆர்எஸ் 120 நகராட்சிகளில் 100 ஐ வென்றுள்ளது. 9 மாநகராட்சிகளில் 7ல் வென்றுள்ளது. காங்கிரசும் பாஜகவும் கடும் சவால் அளித்த இறுதியில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் வெற்றி பெற்றனர்.
120 நகராட்சிகள் மற்றும் ஒன்பது மாநகராட்சிகளுக்கான தேர்தலில் 70.26 சதவீத வாக்குகள் பதிவானது. கரீம்நகர் மாநகராட்சியின் 58 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 24ம் தேதி நடைபெற்றது, இதில் 62.18 சதவீத வாக்குகள் பதிவானது.
பாஜக, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் AIMIM தலா ஒரு நகராட்சியை வென்றன. டிஆர்எஸ் 1,500 க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது, காங்கிரஸ் 495 இடங்களை மட்டுமே பெற்றது. பல இடங்களில் சுயேட்சைகள் அதிகளவு வென்றிருக்கின்றனர்.
அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM 56 இடங்களை வென்றது, மேலும் சமீபத்தில் வகுப்புவாத வன்முறையால் உலுக்கிய பைன்சா பிராந்தியத்தை கைப்பற்றியுள்ளது. 9 நகராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் டிஆர்எஸ் ஆதிக்கம் செலுத்தியது.
இது 123 இடங்களையும், பாஜக 42 இடங்களை வென்று 2வது இடத்தையும் பிடித்தது. சுயேட்சைகள் 41 இடங்களையும், காங்கிரஸ் 37 இடங்களையும் பெற்றன. நகராட்சிகளில் 77 வார்டுகளிலும், கார்ப்பரேஷனில் ஒரு வார்டிலும் டிஆர்எஸ் வேட்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3 நகராட்சி வார்டுகளில் AIMIM கட்சியின் 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதிலுமான வெற்றியால் டிஆர்எஸ் தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிஆர்எஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான கே டி ராமராவ் கூறியதாவது:
எங்கள் தலைவரும், முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவின் தலைமையை மீண்டும் வெளிப்படுத்தியதற்காக தெலுங்கானா மக்களுக்கு நன்றி.
2014ம் ஆண்டில் தெலுங்கானா உருவானதிலிருந்து வெற்றி மேல் வெற்றி. ஒவ்வொரு தேர்தலிலும், சட்ட சபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், பஞ்சாயத்து, நகராட்சி என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றியை எங்களுக்கு வழங்குவதற்காக கடந்த ஒன்றரை மாதங்களாக மிகவும் கடினமாக உழைத்த தெலுங்கானா மக்களுக்கும், டிஆர்எஸ்ஸின் தொழிலாளர்கள் மற்றும் தலைமைக்கும் நன்றி என்றார்.