மும்பை
காங்கிரசில் இணைந்த நடிகை ஊர்மிளா மதம் மாறி பெயரை மரியம் அக்தர் மிர் என மாற்றிக் கொண்டதாக விஷமிகள் இணையத்தில் அவருடைய தகவலை மாற்றி உள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் ஊர்மிளா போட்டியிடுகிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பில் மும்முரமாக இருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய பல பொய்த் தகவல்கள் இணையத்தில் உலவத் தொடங்கி உள்ளன.
ஊர்மிளாவின் விக்கி பீடியா விவரப் பக்கத்தில் சில விஷமிகள் ஊர்மிளா இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதாகவும் அவர் பெயர் மரியம் அக்தர் மிர் என மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2015 ஆம் வருடம் காஷ்மீரை சேர்ந்த மாடலும் தொழிலதிபருமான மோசின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்ய ஊர்மிளா மதம் மாறியதாக விவரங்கள் மாற்றப்பட்டன.
அது மட்டுமின்றி ஏற்கனவே அவருடைய தந்தை ஸ்ரீகாந்த் மடோன்கர் மற்றும் அவர் தாய் ருக்ஷானா சுல்தானா ஆகிய இருவரும் மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் குடும்பத்தில் இது இரண்டாம் தலைமுறையின் மதமாற்ற திருமணம் எனவும் பகிரப்பட்டிருந்தது.
இந்த செய்தி ஊர்மிளாவின் தந்தை ஸ்ரீகாந்த் மடோன்கருக்கு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. அவர் இது குறித்து, “ஊர்மிளா ஒரு ஜனநாயக கருத்தை கொண்ட பெண். அவர் தனது விருப்பத்தை என்றும் மறைத்ததில்லை. அது மட்டுமின்றி தனது சொந்த விவரங்களை குடும்பத்தினரிடம் மற்றும் யாரிடமும் மறைக்காதவர். அவரி குறித்து இவ்வாறான தவறான தகவல் வெளியிட்டது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், “காங்கிரஸ் ஊர்மிளாவை வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. எனவே அவருடைய பெருமையை குறைக்க அவருடைய திருமணம் குறித்து தகவல் வெளியிட்டு அசிங்கம் செய்ய எண்ணி உள்ளது. முதலில் ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா திருமணம் குறித்து பாஜக சொல்லியது நினைவில் உள்ளதா? அதைப் போல் தான் இதுவும்.” என தெரிவித்துள்ளார்.
ஊர்மிளாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உதவும் காங்கிரஸ் தலைவ்ர் அசோக் சுத்ராலே, “ஊர்மிளாவை காண ஏராளமான கூட்டம் கூடுகிறது. கடந்த 2004 ஆம் வருடம் பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கூட இவ்வளவு கூட்டம் கூடவில்லை. ஊர்மிளா ஒரு அழகும் அறிவும் கொண்ட ஒரு பெண் என்பதால் அவருடைய வெற்றியை தடுக்க அவருடைய அரசியல் எதிரிகள் இவ்வாறு செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.