அகர்தலா
திரிபுரா முதல்வர் கஞ்சாவை எதிர்க்கும் நிலையில் அம்மாநில் அமைச்சர் கஞ்சா வளர்ப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. திரிபுராவி கஞ்சா சட்ட விரோதமாக பயிரிடப்பட்டு வருகிறது. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் சமீபத்தில் அம்மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 75000 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் தமது அரசு கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒரு போதும் ஊக்குவிக்காது என தெரிவித்தார்.
இந்நிலையில் திரிபுரா மாநில சுகாதார அமைச்சர் சுதிப் ராய் பர்மன் செய்தியாளர்களிடம், “கஞ்சா பயிர் பல மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயினும் இதை மத்திய அரசு தடை செய்துள்ளது. கஞ்சாவைக் கொண்டு புற்றுநோயை குணமாக்கும் மருந்துகளும் உருவாக்க முடியும்.
எனவே கஞ்சாவை தடை செய்யப்பட்ட பொருளாக வைத்திருப்பதை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். கஞ்சாவுக்கான தடையை மத்திய அரசு நீக்கி அதை வளர்க்க அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பல மாநிலங்கள் அதை பின்பற்றி கஞ்சாவுக்கான தடையை நீக்கும்.” என தெரிவித்தார்.
திரிபுரா மாநில காங்கிரஸ் துணை தலைவர் தபஸ் டே, “அமைச்சர் கூறி இருப்பது நல்ல யோசனை. ஆனால் அரசு கஞ்சா வளர்ப்பை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அத்துடன் கஞ்சா மருந்துக்காக மட்டும் பயன்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே கஞ்சா வளர்ப்பை சட்டபூர்வமாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.