அகர்தலா :
திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு மொத்த முள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 36 பேர் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். அவர்களில் 7 பேர் முதல்-அமைச்சர் பிப்லாப் குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சுதீப் ராய் பர்மன் தலைமையில் டெல்லி வந்துள்ள 7 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முகாமிட்டுள்ளனர்.
“முதல்-அமைச்சர் பிப்லாப் சர்வாதிகாரமாக செயல்படுகிறார். அனுபவம் இல்லாதவர், மக்கள் செல்வாக்கு கிடையாது. எனவே அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்திக்க வந்துள்ளோம்” என தெரிவித்த பர்மன், “எங்களுக்கு மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது” என்றார்.
“ஜே.பி. நட்டாவை சந்திக்காமல் ஊர் திரும்ப மாட்டோம்” என்பதில் அவர்கள் உறுதி படத்தெரிவித்துள்ளனர். ஆனால் திரிபுரா மாநில பா.ஜ.க. தலைவர் மாணிக் ஷா, “பிப்லாப் தலைமையில் பா.ஜ.க. அரசு பாதுகாப்பாக உள்ளது. ஏழு, எட்டு எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விட முடியாது” என தெரிவித்துள்ளார்.
– பா.பாரதி