கர்தலா

வீந்திரநாத் தாகுர் நோபல் பரிசை திருப்பி அளித்து விட்டதாக திரிபுரா முதல்வர் தவறாக கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் தேப் குமார் பதவி ஏற்றார்.   அவருடைய பேச்சு தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி பாஜகவுக்கு சங்கடத்தை உண்டாக்கி வருகிறது.   மகாபாரதக் காலத்திலேயே இணையம், செயற்கைக்கோள் இருந்தன என்ற அவரது கருத்து சர்ச்சையை கிளப்பியது.

அது ஓய்ந்த உடன் அவர் அடுத்துக் கூறிய ஐஏஎஸ் தேர்வுகளை கட்டுமானப் பொறியாளர்கள் மட்டுமே எழுத வேண்டும்,  மற்ற பொறியாளர்கள் தகுதி அற்றவர்கள் என்னும் கருத்து சர்ச்சையை கிளப்பியது.   தாம் அந்த அர்த்தத்தில் எதையும் கூறவில்லை என அதற்கு முதல்வர் மறுப்பு தெரிவித்த பின் சர்ச்சை சிறிது அடங்கியது.

முதல்வர் பிப்லாப் தேபின் பேச்சு அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.   அவர், ரவீந்திரநாத் தாகூர்  பிறந்த நாள் விழா நிகழ்வில், “ரவிந்திரநாத் தாகூருக்கு 1913 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.   ஆனால் ஜாலியன் வாலா பாக் சம்பவத்தை கண்டித்து அவர் அந்தப் பரிசை 1919ஆம் ஆண்டு திருப்பி கொடுத்து விட்டார்” என பேசி உள்ளார்.

இதை மறுத்து நெட்டிசன்கள் டிவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் பதிவு இட்டு வருகின்றனர்.   அத்துடன் அவர் பேசிய வீடியோவை வைத்து அவரை கேலி செய்யும்விதமாக மற்றொரு வீடியோவும் பதிவிட்டு வருகின்றனர்.

புகழ்பெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1913 ஆம் வருடம் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டார்.  அதை திரும்ப அளிக்கவில்லை.  1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது.  அப்போது இங்கிலாந்து அரசு வழங்கிய நைட்ஹூட்  என்னும் பட்டத்தை தாகூர் வாங்க மறுத்துள்ளார்.  இதுதான் உண்மையில் நடந்ததாகும்.